சேலம் மாநகராட்சியில் அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள்சொத்துவரியினை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம்
சேலம்:
தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84-ன் படி 2023-2024-ம் ஆண்டின் 2-ம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5 ஆயிரம் வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.