சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர் தகுதித்தேர்வு
- சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது.
- தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னாள் ராணுவத்தினரும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று முதல் 8-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்ட முதல் கட்ட தேர்வு நடக்கிறது.
பின்னர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் 9-ந்தேதி முதல் நடக்க உள்ள கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வில் பங்கேற்பதற்கு முன் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் கலந்து கொள்ள வருவோர் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கருவிகள் தேர்வு வளாகத்திற்கு எடுத்து வரக்கூடாது, காலம் தாமதம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.