ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள்
- நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் ‘லிப்ட்’ இயக்கப்படுகிறது.
- லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு ஆஸ்பத்திரி 4 மாடி கொண்ட புது கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் 'லிப்ட்' இயக்கப்ப டுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் 3 நோயாளிகள் ஆஸ்பத்திரியின் லிப்டை பயன்படுத்தி உள்ளனர்.
அப்போது லிப்ட் எந்த தளத்திலும் நிற்காமல் மேலும், கீழும் சென்று வந்தது. இதனால் லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அறிந்த மருத்துவ பணியாளர்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்ட்டில் சிக்கியிருந்த 3 பேரையும் அரை மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் ஜெய லட்சுமி கூறுகையில், லிப்ட்டிற்குள் சென்ற நோயாளிகள் லாக் பட்டனை தவறுதலாக அழுத்தியுள்ளனர். இதனால் மேலும், கீழும் சென்றது. அவர்கள் உடனே மீட்கப்பட்டனர். லிப்ட் பழுது எதுவும் இல்லை என்றார்.