தூத்துக்குடியில் சலூன் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு-அக்காள் கணவர் கைது
- யுவராஜ் குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வந்து செல்வார்.
- தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது38). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா மகேஷ்வரி என்பவருக்கும், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகேஷ்வரி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் யுவராஜ் குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வந்து செல்வார்.
நேற்று அதேபோல் குழந்தைகளை பார்க்க வந்த போது செல்வத்திற்கும், யுவராஜிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
நேற்று மாலை இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் அரிவாளால் செல்வத்தை வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.