சாம்பவர்வடகரை ராமசாமி கோவில் வைகாசி விசாக தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- ஸ்ரீ ராமசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
- கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி பூஜை, கொடிபட்டம் அழைத்தல், கொடியேற்றுதல், தேர்கால் நாட்டுதல் நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 21 வகையான அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்தி அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம் 1.30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு புறப்பட்டு 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதையடுத்து 11-ம் திருவிழாவான இன்று (13-ந்தேதி) இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்காவன சப்பரத்தில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 1.30 மணிக்கு திருவிழா நிறைவு பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.