உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் மணல் கொள்ளை மனித கொலைகளாக மாறி வருகிறது-தம்பிதுரை எம்.பி.பேட்டி

Published On 2023-05-02 08:19 GMT   |   Update On 2023-05-02 08:19 GMT
  • மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் அவர்களை 12 மணி நேரம் பணியாற்ற வைக்க சட்டம் இயற்றினார்.
  • இதனை கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அ.தி.மு.க.வும் எதிர்த்தது.

ஓசூர்,

ஓசூர் ஜூஜூவாடியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க . கொள்கைபரப்பு செயலாளரும், எம்பியும், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாமிரபரணியில் மணல் கொள்ளை, பாலாற்றில் மணல் கொள்ளை, பல ஆறுகளில் எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளையாக இந்த ஆட்சியில் நடந்து வருகிறது.

இந்த மணல் கொள்ளையை தடுக்க வந்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள், மணல் கொள்ளையானது, மனித கொலைகளாக மாறி கொண்டிருக்கின்றன.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஸ்டாலின் கூறுகிறார். இப்போது மணல் கொள்ளைகளும், மனித கொலைகளும் நடந்து கொண்டிருப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதி, தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்ததற்கு காரணம் ரஷ்ய புரட்சியாளர், உழைப்பாளர்களின் தலைவராக இருந்து ஸ்டாலின் நினைவாகத்தான் அந்த பேரை நான் வைத்தேன் என்று சொன்னார்.

ஆனால், அந்த மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் அவர்களை 12 மணி நேரம் பணியாற்ற வைக்க சட்டம் இயற்றினார்.

இதனை கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அ.தி.மு.க.வும் எதிர்த்தது. இதனால் பயந்த ஸ்டாலின், அந்த சட்டத்தை வாபஸ் பெற்றார். இது போன்ற சட்டங்களை கொண்டு வந்தால் கவர்னர் எப்படி கையெழுத்து போடுவார்?

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News