காந்தி மார்க்கெட் அருகே சாலையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
- காந்தி மார்க்கெட்டிலிருந்து தினசரி அதிக அளவு கழிவுகள் வெளியேறுகிறது.
- கழிவுகள் கொட்டப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறிவருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்திமார்க்கெட் முக்கிய சந்தையாக உள்ளது. இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வியாபாரிகளால் வாங்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டிலிருந்து தினசரி அதிக அளவு கழிவுகள் வெளியேறுகிறது. ஆனால் இந்த கழிவுகள் கொட்டப்படுவதற்கு முறையான இடம் இல்லாததாலும், உடனுக்குடன் அகற்றப்படாததாலும் கோட்டைக்குளம் சாலை, தாலுகா அலுவலக சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது.
நகரில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சாலையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளில் கால்நடைகள், பன்றிகள் உணவுக்காக அதனை கிளறி சாலையின் மையப்பகுதி வரை கொண்டுவந்து விடுகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கழிவுகள் கொட்டப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறிவருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.