தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும் அதனை பயன்படுத்துவதில்லை
- துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும்.
- தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் வாஷ் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முதல்நிலை பயிற்சியாளர்கள் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பினை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-
துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும். அப்படிப்பட்ட துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.
தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது. கிராமபுற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புரவு, கழிவு சுத்திகரிப்புக்கான பணிகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். ஊரக பகுதியில் 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் 2,588 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 961 தொகுதிகளில் 1,922 எண்ணிக்கை மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கான உரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை பிரித்தல் மற்றும் சேகரித்து வைப்பதற்கான கொட்டகை மற்றும் மண்புழு உரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகர்புறத்திற்கு அருகாமையில் உள்ள 16 ஊராட்சிகளில் இயற்கை உரத் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கும், மக்காத குப்பைகளை வீடு வீடாக, பொது இடங்கள், சந்தை, நிறுவனங்களிலிருந்து சேகரித்து, பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத மறுசுழற்சி செய்யதக்க குப்பைகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் தூய்மைக் காவலர்களுக்கான சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தூய்மை பணி மேற்கொள்வதற்கான கருவிகள் வழங்கப்படுகின்றன. 306 கிராம ஊராட்சிகளுக்கு 3,503 குப்பை வண்டிகள், 3,313 குப்பைத் தொட்டிகள், 374 மின்கலன் வண்டிகள், 76 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நெகிழிக் கழிவுகளை அரவை இயந்திரம் மூலம் சிறுசிறு துகள்களாக அரைத்து தார் சாலைகள் அமைக்கவும், நெகிழி பொருட்கள் செய்வதற்கான கட்சா பொருளாகவும் மாற்றுகின்றனர். 14 ஊராட்சி ஒன்றியங்களில் 14 நெகிழிக்கழிவு மேலாண்மை அலகுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கழிப்பறை பராமரிப்பு, தூய்மை பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும், அதனை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றி உள்ளனர். இப்பணியாளர்களின் சமூக அந்தஸ்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, யுனிசெப் ஆலோசகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.