வேதாரண்யத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன
- நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
- பொதுமக்களிடம் சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி, வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பினர்கள், ஈகா, பிரியம் அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
பின், நந்தவன குள தெருவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, அகஸ்தியர்கோவில் குளம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக நகராட்சி நுண்ணிய உரக்கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் வழங்கினர்.
பின்னர், தோப்புத்துறை இலந்தயடி ரஸ்தா பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் குப்பைகளை சாலையில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.