கோவையில் போலீசாரால் தேடப்பட்ட ரவுடி கோர்ட்டில் சரண்
- சண்முகம் மீது கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.
- எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன் என சண்முகம் கூறியுள்ளார்.
கோவை,
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.
வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை கடந்த சில வாரங்களாக தேடி வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் ரவுடி சண்முகம் இன்று தனது வக்கீல்களுடன் கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
பின்னர் அவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். முன்னதாக சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீது 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் என்னை சுட்டு விடுவேன் எனவும், என் குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள்.
என் குடும்பத்தினருக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் தானாக முன்வந்து இன்று வக்கீல்களுடன் வந்து கோர்ட்டில் சரண் அடைந்துள்ளேன்.
நான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து 2 மாதங்கள்தான் ஆகின்றது. திருந்தி வாழ்ந்து வரும் என்னை போலீசார் தொடர்ந்து தேடி வந்ததால் சரண் அடைந்தேன்.
எனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் உள்ளன.சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை, கால்களை உடைத்து விட்டனர். எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.