பள்ளி மாணவனை காரில் கடத்த முயன்ற கும்பல் யார்?
- பத்து வயது சிறுவன், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
- சிறுவன் கடத்தப்பட்ட தாக கூறப்பட்ட பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). கார்பெண்டர். இவரது மகனான பத்து வயது சிறுவன், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
டியூஷன்
நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், மாலையில் டியூசன் படிக்கச் சென்றான். மாலை 6 மணி அளவில் டியூசன் முடிந்து சிறுவன் வெளியே வந்தபோது, காரில் வந்த 2 வாலிபர்கள் சிறுவனிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் அவர்கள், சிறுவனை வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறயுள்ளனர். இதையடுத்து சிறுவன் காரில் ஏறி உள்ளான். பின்னர் சிறிது நேரத்தில் கார் 4 ரோடு பகுதிக்கு சென்றது. அங்குள்ள ஒரு கடை முன் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து வாலிபர்களும் இறங்கினர்.
கடத்தல்
அந்த நேரத்தில் சிறுவன் காரில் இருந்து இறங்கி தப்பினார். தனது வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் தன்னை காரில் 2 பேர் கடத்தி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ளேன் என கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சி.சி.டி.வி கேமிரா
சிறுவன் கடத்தப்பட்ட தாக கூறப்பட்ட பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடத்திச் சென்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். விசாரணை முடிவில் தான், மாணவனை எதற்காக அந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது? முன் விரோதத்தில் அந்த கும்பல் கடத்தி சென்றதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை கடத்த முயற்சி செய்தார்களா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.