உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் திருடன் என நினைத்து சிற்பியை அடித்துக் கொன்றோம்- கைதான ஓட்டல் ஊழியர்கள் வாக்குமூலம்

Published On 2023-05-28 09:13 GMT   |   Update On 2023-05-28 09:13 GMT
  • வடிவேல் அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார்.
  • போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஓட்டல் அருகே வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் பேரூர் இந்திரா நகரை சேர்ந்த வடிவேல் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கோவில் சிற்பியாக உள்ளார். அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார். வடிவேல் எப்படி குரும்பபாளையம் வந்தார் என்று தெரியவில்லை.

எனவே போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சிற்பி வடிவேல் வேலை முடிந்து நண்பர்களுடன் பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அப்போது அவர் குரும்பபாளையத்தில் இறங்கி சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் குரும்பபாளையத்தில் வடிவேல் இறந்து கிடந்த ஓட்டலில் பணியாற்றிய வலியாம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 57), ராஜ்குமார் (21), பால்துரை (45), சந்தோஷ்குமார் (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் வடிவேலை அடித்துக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரிடம் கைதான 4 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் குரும்பபாளையத்தில் ஓட்டல் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது அங்கு ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்தபடி ஓட்டலுக்குள் புகுந்தார். எனவே நாங்கள் அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டோம். அதற்கு அவர் ஓட்டலில் சாப்பிட ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார்.

எங்களுக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே நீ திருடன் தானே என்று கேட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை திருடன் என்பதா என கேட்டு எங்களுடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் குடிபோதையில் இருந்ததால் அவரை சகட்டு மேனிக்கு தாக்கினோம். இதில் அவர் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தார்.

அதன்பிறகு அவரை வெளியே தூக்கி வீசி விட்டோம். ஓட்டலுக்கு வெளியே படுகாயத்துடன் கிடந்தவர் உயிருடன் இருப்பார் என்று கருதினோம். ஆனால் அவர் இறந்து போவார் என்று நினைக்கவில்லை. ஓட்டலுக்கு திருட வந்தவர் என்று நினைத்து உணர்ச்சி வேகத்தில் தாக்கி கொலை செய்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News