கடலூரில் கடல் சீற்றம் எதிரொலி: மீன் வரத்து குறைவால் துறைமுகம் வெறிச்சோடியது
- கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.