கோவாவில் சொகுசு கப்பலில் மிஸ்டர், மிஸ் மற்றும் மிசஸ் தமிழகம்-2023க்கான சீசன் 3 போட்டி
- வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோவாவில் சொகுசு கப்பலில் போட்டிகள் நடைபெறும்.
- கோவாவில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சார்பில் மிஸ்டர், மிஸ் மற்றும் மிசஸ் தமிழகம் - 2023 க்கான சீசன் 3 போட்டிகள் கோவாவில் சொகுசு கப்பலில் நடைபெறும் என அதன் நிர்வாக இயக்குனர் ஜான் அமலன் தெரிவித்தார்.
ஏற்கனவே 2 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இந்த ஆண்டிற்கான மிஸ்டர், மிஸ் மற்றும் மிசஸ் தமிழகம் போட்டிகளை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜான் அமலன், நியூ பிரிட்ஜ் தொண்டு நிறுவனத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன், பிக் புல் நிறுவன மேலாண்இயக்குநர் அரவிந்த், தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் தலைவர் வினோத், இந்தியன் மீடியா ஒர்க்ஸின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜா மற்றும் அன்சர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோவாவில் சொகுசு கப்பலில் போட்டிகள் நடைபெறும் என ஜான் அமலன் தெரிவித்தார். இதில் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகவும் கூறிய அவர், போட்டியில் பங்கேற்பவர்கள் ஒருநாள் விவசாயிகளின் வீடுகளில் தங்கி விவசாயம் செய்து தேர்வாக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறினார்.
கோவாவில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் இணைய தளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதுடன் கோவாவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.