நிலம் கையகப்படுத்துவதை தடுக்கக்கோரி கோவில் அறக்கட்டளையினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.
- அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், கட்டிகானப்பள்ளி, கீழ்புதூர், சோமார்பேட்டை உள்ளிட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் தனி நபர் வாங்கியுள்ளார். எனவே, அந்த இடத்தில் உள்ள சிலைகளை அகற்றிட வேண்டும் என அந்த இடத்தை வாங்கிய நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அந்த இடத்தை வாங்கியவரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆலய அறக்கட்டளையினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள இடத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து, கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள 21 கிராம மக்கள் வழிபட்டு வந்தோம். இதனை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கிராம மக்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கு முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர், கிருஷ்ணகிரி தாசில்தார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.