உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் ஓட்டுநர்களுக்கு விநியோகித்த காட்சி.


கோவில்பட்டியில் சாலை வரி செலுத்தாத, தகுதி சான்று இல்லாத வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-12-23 08:04 GMT   |   Update On 2022-12-23 08:04 GMT
  • கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓடுவதாக புகார் வந்தது.
  • 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.72,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், சீருடை அணியாமல் ஓட்டுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவணங்களின்றி ஆட்டோவை இயக்கக் கூடாது. சீருடை அணிந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி கிடையாது.

உரிய ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தனர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஓட்டுநர்களுக்கு விநியோகித்தனர்.

தொடர்ந்து நடத்திய வாகனச் சோதனையில் சாலை வரி செலுத்தாத லாரி, தகுதி சான்று இல்லாத மினி லாரி மற்றும் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய வாகனத்தில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்றது என 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3 வாகனங்களுக்கும் அபராதமாக ரூ.72,500, சாலை வரி ரூ.30,450 செலுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணங்களை செலுத்திய பின்பே வாகனங்கள் விடு விக்கப்படும் எனவும், வாகன உரிமையாளர்கள் சாலை வரியை உடனே செலுத்துமாறும், சொந்த உபயோகத்திற்கான வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News