வைகாசி விசாகத்தை முன்னிட்டு செங்கோட்டை-மதுரை ரெயில் பழனி வரை நீட்டிப்பு
- வைகாசி விசாகத்தை முன்னிட்டு செங்கோட்டை-மதுரை ரெயில் பழனி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வைகாசி விசாகத் திருநாள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
வீ.கே.புதூர்:
வைகாசி விசாகத் திருநாள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் குடம் எடுத்தும் பாதயாத்திரையாகவும், பேருந்துகள் மற்றும் ரெயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கில் திரண்டு வருவது வழக்கம்.
பக்தர்களின் வசதிக்காக, செங்கோட்டை-மதுரை காலை நேர பயணிகள் ரெயில் பழனி வரை ஒரு நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது மதுரைக்கு காலை 10.35 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் காலை 10.50 மணிக்கு மதுரையில் புறப்பட்டு பழனிக்கு மதியம் 1.25 மணிக்கு சென்றடையும் வகையிலும், மாலை 2.45 மணிக்கு பழனியில் புறப்பட்டு, மதுரைக்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும்.
இதே ரெயில் மதுரையில் வழக்கம்போல மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயிலால் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-
வரும் காலங்களில் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களுக்கு மதுரை - பழனி இடையே குறைந்தபட்சம் 4 சிறப்பு ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முன்வர வேண்டும்.
திருச்செந்தூருக்கு மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்குவதில், நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தற்போது உள்ள 3 நடை மேடைகளில், ஒன்றில் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டும் 12 பெட்டிகள் வரை மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளதால் அதிகப் பெட்டிகளையும் இயக்க முடியவில்லை.
எனவே திருச்செந்தூரில் இன்னும் 2 நடை மேடைகள் அமைத்து அனைத்து நடை மேடைகளிலும் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.