சேவூர் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் :பொதுமக்கள்-தொழில் துறையினர் எதிர்ப்பு
- துணை மின் நிலைய மின்வாரிய அலுவலகம் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
அவினாசி :
அவிநாசி மின் கோட்டத்துக்கு உள்பட்ட சேவூா் மின்வாரிய அலுவலகம் சேவூரின் நகரப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் துறையினா், 8 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் நுகா்வோா் உள்ளிட்டோா் மின்கட்டணம் செலுத்தவும், இணைப்புக்காக விண்ணப்பிப்பது, புகாா் தெரிவிப்பது ஆகியவற்றை எளிய முறையில் செய்து வந்தனா். ஆனால் சேவூரை அடுத்துள்ள பாப்பாங்குளம் ஊராட்சியில் செயல்படும் சேவூா் துணை மின் நிலையத்துக்கு மின்வாரிய அலுவலகம் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து தொழில் துறையினா், பொதுமக்கள் கூறியதாவது:- தற்போது இடமாற்றப்படும் அலுவலகம் சேவூரில் இருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத பகுதியாக உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்தும் பெண்கள் முதல் அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும். ஆகவே உடனடியாக மீண்டும் சேவூரின் மையப்பகுதியிலேயே மின்வாரிய அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக, சேவூா் கைகாட்டி பகுதியில் உள்ள கதா் கிராம கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.