உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை- தாம்பரம் ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என பெயரிடப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-03-25 07:43 GMT   |   Update On 2023-03-25 07:43 GMT
  • தற்போது தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • புதிதாக இயங்க இருக்கும் ரெயிலானது 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

தென்காசி:

நெல்லை - தென்காசி இடையே 21.9.2012 அன்று மீட்டர் கேஜ் பாதையானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேரடி ரெயில் இல்லை

இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.

பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தற்போது நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

13 மணி நேர பயணம்

இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு நிரந்தர ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.

புதிதாக இயங்க இருக்கும் செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம் வழியாக 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

தாமிரபரணி எக்ஸ்பிரஸ்

செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையு மாறும், தாம்பரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடி கொடி யசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News