உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்ற கடைகளுக்கு சீல்

Published On 2023-03-24 09:15 GMT   |   Update On 2023-03-24 09:15 GMT
  • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
  • விளம்பர பலகை மற்றும் ஒலிப்பான் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலாதலமாக உள்ள காரணத்தினால் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகப்படியாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விளம்பர பலகையை வைத்து தொடர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

கியாஷ்க் சரியான முறையில் செயல்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணிப்பதோடு அருகில் உள்ள கடைகளில் குப்பைகளை கியாஷ்கில் கொடுக்குமாறு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனைச்

சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான் கருவி மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை இயக்கமாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News