பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது.
- பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 5 ஆயிரத்து 74 மி.கனஅடியாக (5 டி.எம்.சி) குறைந்து உள்ளது.
பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது. இதனால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஏரியின் ஷட்டர் பகுதியில் மட்டும் குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து உள்ளதால் அங்குள்ள மீன்கள் இறந்து வருகின்றன. ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது.
பூண்டி ஏரியில் நீர் மட்டம் சரிந்ததை தொடர்ந்து அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி எரியில் நீர்இருப்பு அதிகரித்தால் தான் இனி வரும் நாட்களில் புழலுக்கு குடிநீர் அனுப்ப முடியும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கிருஷ்ணா தண்ணீர் இப்போதைக்கு திறக்கப் படவாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2908மி.கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1649 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. 60 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் வெறும் 124 மி.கனஅடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 311 மி.கனஅடி நீர் இருக்கிறது. குடிநீர் ஏரிகளில் தற்போதைய நிலவரப்படி 5 டி.எம்.சி தண்ணீர் இரு ப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் 7 டி.எம்.சி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.