சீர்காழி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
- குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். எழுத்தர் சரத் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-
துர்காமதி : மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் சரவணன்: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஏற்கனவே 84 ஆயிரம் செலவில் அப்பகுதியல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது.
விஜயகுமார்: தில்லைவிடங்கன், புதுதுறை, வெள்ளபள்ளம் ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே புதுத்துறை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ரிமா: அகணி ஊராட்சியில் வி.ஏ.ஓ அலுவலகம், பகுதி நேர அங்காடிக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.
ஜான்சிராணி: நகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஆனந்தி: கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜ்: நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
வள்ளி: பெருந்தோட்டம் ஊராட்சியில் நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய போர் அமைத்து நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது,
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறைபாடுகள் இன்றி துரிதமாக நடைபெற்று வருகிறது . கவுன்சிலர்கள் கேட்கும் பணிகள் ஒவ்வொன்றாக பொது நிதிக்கு ஏற்றவாறு செய்து தரப்படும் என்றார்.