சிறுவாணி ஆற்றுத்தண்ணீரை மாநகராட்சியே சுத்திகரித்து வழங்க ஏற்பாடு-கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பேட்டி
- மாநகராட்சியே சுத்திகரிப்பதால் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும்.
- கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.
கோவை,
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி ஆற்றில் இருந்து குடிதண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவாணியில் இருந்து குடிதண்ணீரை கொண்டு வந்து சுத்திகரித்து, மாநகராட்சி முழுவதும் விநியோகம் செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு லிட்டருக்கு ரூ.11 வீதம் மாதந்தோறும் ரூ.4 கோடி வழங்க வேண்டி உள்ளது.
எனவே சிறுவாணி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாநகராட்சியே சுத்திகரித்து வழங்குவது என்று முடிவு செய்து உள்ளது. இந்த வகையில் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தேச அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.
குறிச்சிகுளத்தில் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதியில் 10 சதவீதம் பணிகள் நிலுவையில் உள்ளது. இது வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.