புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது
- புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர்.
கடலூர்:
புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினம் தோறும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.