கரிசல்பட்டி தர்கா சந்தனக்கூடு விழா தொடக்கம்
- சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி தர்கா சந்தனக்கூடு விழா தொடங்கியது.
- இந்த விழாவில் மும்மதத்தினர் கலந்து கொள்கின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூர் ஒன்றியம் அருகே உள்ள கரிசல்பட்டியில் ஹஜரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா மதநல்லி ணக்க விழாவாக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 873-வது சந்தனக்கூடு விழா நேற்று தொடங்கியது.
இதை முன்னிட்டு கரிசல்பட்டி அருகில் உள்ள கே.புதுப்பட்டி, கரியாம் பட்டி, வலசைப்பட்டி இந்துக்களும் உள்ளூர் முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து ஊரின் மையப்பகுதியில் உள்ள மச்சி வீட்டு அம்மா தர்ஹாவிற்கு வந்தனர். அங்கிருந்து கொடி யேற்றத்திற்கான கொடி யினை அலங்கரிக்கப்பட்ட நாட்டிய வெள்ளை குதிரையின் மேல் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலம் ஹஜ்ரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா வந்தடைந்த பின் கொடி தர்ஹா உள்ளே கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துவா செய்த பின்னர் தர்ஹா முன்பு உள்ள கொடிமரத்தில் 10 அடி நீளமுள்ள பிரமாண்டமான கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தின்போது வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தினை தொடர்ந்து இன்றிலிந்து 10-வது நாளில் சந்தனம் பூசும் சந்தனக் கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் பங்கேற்பர்.கொடியேற்றத்தை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க நாட்டிய குதிரையின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.