உள்ளூர் செய்திகள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா

Published On 2022-08-10 08:44 GMT   |   Update On 2022-08-10 08:44 GMT
  • வாராப்பூர் ஊராட்சியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
  • சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் பாத்திமா அஸ்ஸனா உஸ்ஸனா தர்காவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இதில் பங்கேற்பார்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த விழாவானது இப்பகுதி மக்களால் சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாராப்பூரில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து ஆண்கள் மட்டும் 3 முறை (நெருப்பு தணலில்) பூக்குழியில் இறங்கினர். பின்னர் சந்தனம் பூசுதல் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடந்தது.

திருழாவை முன்னிட்டு தப்பாட்டம், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிநாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நோய் தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News