நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை நாளை திறப்பு-மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தகவல்
- 208 பள்ளிகளுக்கு ரூ.4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது.
- செண்பகராமநல்லூரிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட இருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும், கல்வி திறனை மேம்படுத்தும் வகையிலும், நெல்லையை கல்வியில் முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையிலும் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் 208 பள்ளிகளுக்கு முதற்கட்டமாக மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, பாளையங்கோட்டை ஒன்றிய பகுதியில் 35 பள்ளிகளிலும், களக்காடு ஒன்றியத்தில் 21 பள்ளிகளிலும், மானூர் ஒன்றியத்தில் 59 பள்ளிகளிலும், நாங்குநேரி ஒன்றியத்தில் 60 பள்ளிகளிலும், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 24 பள்ளிகளிலும், சேரன்மாதேவி ஒன்றியத்தில் 9 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வகுப்பறைகள் திறப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாங்குநேரி சுப்புலட்சுமி மகாலில் நடக்கிறது.
தொடர்ந்து செண்பகராமநல்லூரிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட இருக்கிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது