கோத்தகிரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
- போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அரவேணு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.
இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.