கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு- சுகாதார குழு கூட்டத்தில் தலைவர் பேச்சு
- 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.
- ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அதிகரிக்க வேண்டுகோள்
கோவை,
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் பேசியதாவது:-
தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரின செயல்பாடு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருப்தியாக இல்லை. எனவே அதில் புதிய முறையை கொண்டு வர வேண்டும். தகுதியானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தினால் தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:-
தற்போது குப்பை பிரச்சினை தீவிரமாக உள்ளது. தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பையால் குப்பை மேலாண்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார குழுவினர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டும். உரிய பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகள், பணியாளர்களுக்கு உள்ளது. அப்படி பதில் தரமறுத்தால் மெமோதரப்படும். அதேபோல் ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் சிவக்குமார், நகர் நல அலுவலர் தாமோதரன், உதவி நகர் நகல அலுவலர் வசந்த் திவாகர், பொது சுகாதார குழு உறுப்பினர்கள் குமுதம், மணியன், சம்பத், சுமித்ரா, அம்சவேணி, கமலாவதி, வசந்தாமணி, அஸ்லாம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.