சூலூரில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவான 2 குற்றவாளிகளை தேடி பீகார் விரைந்த தனிப்படை
- கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கோவை,
பீகார் மாநிலம் நாளந்தா புன்னா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 24). இவரது நண்பர்கள் ரஞ்சித்குமார் சவுத்ரி(22), சந்தோஷ்குமார் சவுத்ரி (17).
இவர்கள் 3 பேரும் கோவை சூலூர் அருகே உள்ள செங்கோட கவுண்டன்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர்.அதே பகுதியில் பீகாரை சேர்ந்த உகான் சவுத்ரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகியோரும் வசித்து வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ராஜேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ராஜேஷ்குமார் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சூலூர் போலீசார் உகான் சவுத்திரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்து மாஞ்சி, கணேஷ் மாஞ்சி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் பீகாரில் இருப்பதாக சூலூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி கோவயைில் இருந்து பீகாருக்கு விரைந்துள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.