கோத்தகிரி ஒரசோலை சாலையில் வேகத்தடை- எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்
- இந்த சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
- பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த ஓரசோலை பகுதியில் நடந்த சாலை விபத்தில் கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து இறந்தவரின் உறவினரான மற்றொருவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ஒரசோலை சாலை பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து கூறியதாவது:- இந்த சாலையில் மட்டும் வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்கியவர்களில் 5 முதல் 6 பேராவது இறந்து விடுகின்றனர். பலர் பெரும் காயங்களுடன் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த சாலையில் 300 மீட்டர் அளவிற்கு வேகத்தடை இல்லாததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். இதனால் சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் இந்த சாலையை விபத்து பகுதியாக அறிவித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.