உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மாநில அளவிலான கல்வி கண்டுநர் சுற்றுலா

Published On 2023-07-21 08:55 GMT   |   Update On 2023-07-21 08:55 GMT
  • பேராசிரியர் கற்பகம் வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.
  • வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளை மாநில அளவிலான கல்வி கண்டுநர் சுற்றுலா தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வபிரபு தலைமையில் வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இக்கண்டுநர் சுற்றுலாவில் முதலாவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்க பேராசிரியர் கற்பகம் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், வாழை சாகுபடியிலுள்ள நவீன தொழில்நுட்பங்கள், வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.

அடுத்தபடியாக வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி சிவா கூறுகையில், வாழை பழத்தின் நன்மைகள் வாழை இலையின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதனைக் கண்டு விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

முடிவில் வாழை செயலாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வாழை பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளான பனானா சாக்லேட் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான செய்முறை விளக்கத்தை ரவிச்சாமி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகள் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டதாக கூறி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களுக்கு நன்றி கூறினர். இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அட்மா அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News