உள்ளூர் செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு:ராணுவ வீரர் கலெக்டரிடம் புகார் மனு

Published On 2023-01-24 09:32 GMT   |   Update On 2023-01-24 09:32 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
  • மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30), அவரது கணவரும் ராணுவ வீரருமான செந்தில்குமார் (41) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர், கட்டப்பஞ்சாயத்து செய்து தங்களை ஊர் பிரமுகர்கள் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி அறிவித்தனர். இதுகுறித்து அப்போதே கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் அளித்தோம்.

இதையடுத்து கட்டப் பஞ்சாயத்துகாரர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவர்கள் எங்கள் குடும்பம் உள்பட, மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.

தற்போது, ஊர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்திற்கு தலா, 500 வசூல் செய்தனர். இதில், எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர்த்து விட்டனர். இது குறித்து கேட்டதற்கு உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம், வேண்டுமானால் போலீசில் புகார் கூறுங்கள் எனக் கூறினார்கள்.

திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் நாங்கள் செல்லும்போது அவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர். எங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பள்ளிகளில் கூட பேசுவதில்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை.

எங்கள் குடும்பத்தினர், எல்லையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எங்கள் குடும்பங்களை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். சமூக விரோத செயலில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News