ஆயுதப்படை மைதானத்தில் புகுந்து போலீஸ் வாகனம் திருட்டு: சேலத்தில் கைதான போலி அதிகாரி
- போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை காணவில்லை.
இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த வாகனத்தை திருடி சென்றது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வேளையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு போலீஸ் வாகனத்தை ஒருவர் திருட முயன்றார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த நபர், தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்குமார்(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் அங்கு பொலிரோ வாகனத்தில் வந்துள்ளார்.
அந்த வண்டிகள் அரசு முத்திரை பொருத்தப்பட்டிருந்தது. அவர் முதல்வர் நிவாரண பிரிவின் உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார், அதனை அவர் போலியாக தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மதன்குமார் கூட்டாளிகளுடன் வந்து போலீஸ் வாகனத்தை திருடினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா நேரடியாக விசாரணை நடத்தினார். உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் வெளிப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். திருடப்பட்ட வாகனம் எந்த பகுதி வழியாக சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மதன்குமாரிடமும் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்தான் போலீஸ் வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தை சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த போலீஸ் வாகனத்தை போலீசார் மீட்டனர். மதன்குமார் இரவு ஆயுதப்படை மைதானத்துக்கு தனது சொகுசு காரில் வந்து மது குடித்ததும், பின்னர் அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் சாவி போடாமலேயே இணைப்பு கொடுத்து ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்துச் சென்று ஜங்ஷன் பகுதியில் நிறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திச் சென்று அவரது சொகுசு காரை எடுக்க காலையில் வந்திருக்கிறார். அப்போது போலீஸ் வண்டியில் உள்ள மைக்கை கழற்றி அவரது வண்டியில் வைக்கும் போது போலீசாரிடம் சிக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து ஏராளமான போலியான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த சொகுசு காருக்கான எண்ணையும் போலியாக தயாரித்து ஒட்டி உள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் கடந்த 6 வருடங்களாக தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் தான் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாக அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து அவர் அடிக்கடி தனது காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பில்லில் கையொப்பம் இட்டு சென்று வந்துள்ளார். இவ்வாறு அவர் டீசல் அடித்த வகையில் பாக்கி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் சேர்ந்ததால் அவரிடம் பணத்தை மஞ்சுநாதன் கேட்டார். அதற்கு அந்த நபர் தான் அரசு அதிகாரி என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி மஞ்சுநாதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி டீசல் போட்டு மோசடியில் ஈடுபட்ட மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் வண்டியை திருடி சென்று இதுபோன்ற மோசடியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றனர்.
போலீசாரின் ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதான மதன்குமார் வேறு பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.