பாவூர்சத்திரம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
- துளசி தோப்பு பகுதியில் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
- இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்களை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது துளசி தோப்பு.
காட்டுயானை அட்டகாசம்
இப்பகுதியில் விவசாயிகள் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக துளசி தோப்பு பகுதியை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த அழகன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளை நிலத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை அந்த விவசாயி நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் காட்டில் இருந்து இறங்கிய கரடி ஒன்று நேற்று 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
எனவே துளசிதோப்பு பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் இறங்காத வாறு மின்வேலிகளை அமைக்கவும், வெளியில் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுப் பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.