உள்ளூர் செய்திகள்

கோவை ரேஸ்கோர்சில் வாகனங்களில் சென்றவர்களை விரட்டி கடித்த தெரு நாய்

Published On 2023-06-09 09:04 GMT   |   Update On 2023-06-09 09:04 GMT
  • ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது.
  • நேற்று ஒரே நாளில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.

கோவை,

கோவையின் மைய பகுதியில் ரேஸ்கோர்ஸ் அமைந்துள்ளது. இங்கு 2 அரை கிலோ மீட்டரில் நடைபயிற்சி செல்லும் மைதானம் உள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ரேஸ்கோர்சில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அடைந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் இடங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, ஆலயம், கோவில் ஆகியவையும் அமைந்துள்ளது. எனவே இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை விரட்டி விரட்டி காலில் கடித்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வெறிபிடித்த நாய் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அந்த வழியாக சென்ற வர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இதுபற்றி ரேஸ்கோர்சில் தினசரி நடை பயிற்சி செல்லும் வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

ரேஸ்கோர்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நாய்களை பிடித்து செல்கிறார்கள். பின்னர் கருத்தடை செய்த பின்பு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேறு பகுதிகளில் பிடித்த நாய்களையும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பலர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தினசரி வந்து நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை அளிக்கின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட நாய்கள் அங்கே தங்கி விடுகின்றன. இப்படி நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் நாய்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உணவு வழங்க வேண்டியது தானே. எனவே அதிகாரிகள் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News