உள்ளூர் செய்திகள்

பாரத் நெட் உபகரணங்களை திருடினாலோ சேதப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை

Published On 2023-08-18 09:06 GMT   |   Update On 2023-08-18 09:06 GMT
  • இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், 333 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம சேவை மையம் அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட அறை சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரால் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், அறையில் வேறு தேவையற்றப் பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர் அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார்.

இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடமைகளாகும்.

மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News