புத்தாண்டு கொண்டாட்டத்தில் 'பைக்' ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் எச்சரிக்கை
- முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
- ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அபராதம்
அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்டவைகள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடைபெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
துணை கமிஷனர் எச்சரிக்கை
இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா காலங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதி கரிக்கப்படும். புத்தாண்டு அன்று 'பைக்' ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.