ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
- மாணவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.
- இதனால் தலைகுனிவு ஏற்பட்டதால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள கருப்பமூப்பன்பட்டியை சேர்ந்த மாசாணம் மகள் அர்ச்சனாதேவி(16). இவர் விராலிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் 2-ம் நிலை பருவத்தேர்வுகள் நடைபெற்றது. அப்போது அர்ச்சனாதேவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் சகமாணவிகள் மத்தியில் அர்ச்சனாதேவிக்கு தலைகுனிவு ஏற்பட்டது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனாதேவி தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இரவு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அர்ச்சனாதேவி தூக்குமாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோது பள்ளியில் நடந்த விபரங்களை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.