பாண்டமங்கலம் அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
- பாண்டமங்கலம் அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது.
ஆனால் கணினி அறிவியல் இல்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி பாடப்பிரிவு கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை, எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
மேலும் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்லமுடியாததால் இப் பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மற்ற பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தலைமை ஆசிரியர் தங்கவேல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்பள்ளி கேட்டின் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர்களுடன் வந்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.