சிலம்பக்கலை சங்கம விழாவில் மாணவர்கள் உலக சாதனை
- கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார்.
- இதில் 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களை கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம் வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலை சங்கமம் 2022 விழா தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். காளிசரண், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளு க்கு கேடயங்கள்பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலம்பாட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.4 மாணவிகள் 5 மணிநேரம் 5வகை ஆயுதங்களைக் கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.மணிகண்டன் என்கிற மாணவர் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடர்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தார்.பிரவீன் என்ற மாணவர் கற்கால போர்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணிநேரம் தொடர் சாதனை செய்தார்
அதேபோல் ராஜே ஷ்குமார் என்ற மாணவர் 5 கிலோ கரலாக்கட்டை 3565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டார்.உலக சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அக்கழகத்தின் நிறுவனர் ஆசான் டாக்டர் பி சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.