உள்ளூர் செய்திகள்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

Published On 2023-05-15 09:21 GMT   |   Update On 2023-05-15 09:21 GMT
  • கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் பாதிக்கப்படவுள்ள பகுதிகளுக்கான கிராம, வார்டு அளவிலான வரைப்படங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்கள் முழுமையாக தணிக்கை செய்து, தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

புதியதாக பாதிக்கப்படவுள்ள பகுதி ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபர்கள் விவரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறவனங்கள் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.

பேரிடமர் மீட்பு மற்றும் வெளியேற்றுத்தல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜே.சி.பி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து துறை அரசு அலுவலர்களும் மழை, வெள்ளம், புயல், இடி மின்னல் போன்ற பேரிடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முன்னெச்சரிக்கை செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தென்மேற்கு பருவமழையின் போது, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடம் மேலாண்மைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, டிஎஸ்பி தமிழரசி, நிர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News