பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வளாகம் ஆய்வு
- ரூ.50-க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆகஸ்ட் 10-ந் தேதி விவசாயிகளை கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
பட்டுக்கோட்டை:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
50 ரூபாய் வரையிலும் விற்ற தேங்காய் தற்போது 6 ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் சாலையில் கொட்டி போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து சந்தைப்படுத்துவதற்கான வகையில் தமிழகத்தில் முதன் முதலாக பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வளாகத்தில் மத்திய அரசின் நிதி உதவியில் 5.25 கோடி ரூபாய் பெற்று தனியார் நிறுவனத்திடம் இயந்திரம் பொருத்துவதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை சந்தைபடுத்தும் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது இயந்திரங்கள் பொருத்து பணி வேளாண்துறை பொறியியல் பிரிவுகண்காணிப்பில நிறைவடைந்த நிலையில் இயந்திரம் முழுமையும் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் இருந்து வேறொரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பழைய இயந்திரங்களை இங்கு கொண்டு வந்து பழைய தொழில்நுட்பத்திலான பழமையான இயந்திரத்தை பொருத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் மூலம் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனை வலியுறுத்தி எதிர்வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி பட்டுக்கோட்டை தென்னை வளாகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார். திருவோணம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மதுக்கூர் ஒன்றிய தலைவர் அருள்சாமி, துணை தலைவர் மாரிமுத்து, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் மணிவாசகன், ஒன்றிய செயலாளர் சுந்தரமுருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.