திருநாகேஸ்வரத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
- திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.