உள்ளூர் செய்திகள் (District)

வால்பாறையில் கோடைவிழா சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

Published On 2023-05-28 09:16 GMT   |   Update On 2023-05-28 09:16 GMT
  • கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது.
  • தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.

வால்பாறை,

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் கோடை விழாக்களை நடத்துகிறது. அதன்படி நடப்பாண்டும் கோடை விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி ஆகியவை சார்பில் நேற்றுமுன்தினம் கோடைவிழா தொடங்கி நடக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாணவிகளின் பரதநாட்டியம், தப்பாட்டம், மேஜிக் ஷோ, இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக படகுசவாரி செய்தனர்.

அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள இயற்கை பேரழகு காட்சிகளை கண்குளிரகண்டு களித்தனர். அடுத்தபடியாக வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தில் பாராகிளைடிங் சாகசம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வானில் இருந்தபடி வால்பாறை மற்றும் ஊட்டியின் பேரழகை மெய்மறந்து ரசித்தனர். தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.

இதில் வெளியூர்- உள்ளூரை சேர்ந்த பல்வேறு வகை நாய்கள் கலந்து கொண்டன. இது வெளியூர் சுற்றுலா பயணிகளைவெகுவாக கவர்ந்தது. வால்பாறையில் கோடைவிழா நேற்று தொடங்கிய நிலையில், மதிய நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் அங்கு கலைநிகழ்ச்சிகள் தடைபட்டன. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக மழையில் நனைந்தபடி வால்பாறையில் காலாற நடந்து சென்று இயற்கை கண்காட்சிகளை நேரில் கண்டு ரசித்தனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடைக்கால விடுமுறை முடிந்து வருகிற 7-வது தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. எனவே தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்து ஊட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு, அங்கு நடத்தப்படும் கோடைவிழா மற்றும் இயற்கை காட்சிகளை மெய்மறந்து கண்டுகளித்து ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News