உள்ளூர் செய்திகள்

சென்னையை குளிர்வித்த கோடை மழை- வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி

Published On 2023-05-01 09:39 GMT   |   Update On 2023-05-01 09:39 GMT
  • இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது.
  • தாம்பரத்தில் காலை 10 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

சென்னை:

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து கனமழையாக நீடிக்காமல் விட்டு விட்டு சாரல் மழையாக பெய்தது.

வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், மாதவரம், எழும்பூர், ராயப்பேட்டை, மணலி, எண்ணூர், திருவொற்றியூர், ராயபுரம், அடையாறு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தாம்பரத்தில் காலை 10 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பருவமழை போல வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதேபோல் குரோம்பேட்டை, படப்பை, பல்லாவரம், பெருங்களத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இந்த திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றோர் நனைந்தபடி சென்றனர்.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News