உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாறி அம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா

Published On 2023-04-14 09:17 GMT   |   Update On 2023-04-14 09:17 GMT
  • திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் பங்குனித்தேர்த் திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று மாலை 6.30 மணிக்கு முப்புடாதி அம்மன் வழிபாடு குழுவினரின் பஜனை மற்றும் ஆயிரத்தி 8 திருவிளக்கு பூஜை நடந்தது.

2-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 3-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக பட்டிமன்றம், 4-ம் நாள் இரவு 8 மணிக்கு மெல்லிசை கலந்த நவீன வில்லிசை 5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

6-ம் நாள் மாபெரும் நகைச்சுவை மற்றும் இசைபட்டிமன்றம், 7-ம் நாள் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு ஒரு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா, தொடர்ந்து காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் நடந்தது.

தேரோட்டம்

8-ம் நாள் இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.

பிற்பகல் 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவில் வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் 7 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடந்தது.

10-ம் நாளான நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்தல் நடந்தது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் விசேஷ பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News