உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

Published On 2023-11-18 16:14 GMT   |   Update On 2023-11-18 16:14 GMT
  • முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆறு நாட்கள் திருவிழாவான கந்த சஷ்டி உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

திங்கட்கிழமை காலை கந்த சஷ்டி திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை காலை- மாலை யாகசாலை பூஜைகள், சுவாமி உள்புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. நேற்று மதியம் ஸ்ரீசண்முகர் அபிஷேகமும், மாலை ஸ்ரீ சண்முகர்வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெற்றது.

இன்று காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மாலை மண்ணடி அருகே உள்ள வடக்கு தெருவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது மனிதன், ஆடு, சிம்மம், யானை, யாழி உள்ளிட்ட ஆறு உருவங்களில் சூராபத்மன் உருவெடுத்து முருகனிடம் போரிடுகிறார். முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், மா மரத்தில் சூரபத்மன் தஞ்சம் அடைகிறார். எனவே, முருகர் மரத்தை பிளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சூரபத்மனின் வேண்டுதலை ஏற்று மயிலாகவும், சேவலாகவும் மாற்றி முருகர் தனது இரு பக்கங்களில் வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை காலை சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற சூரசம்கார

நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News