உள்ளூர் செய்திகள்

திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு காமிரா அவசியம்

Published On 2023-10-16 09:53 GMT   |   Update On 2023-10-16 09:53 GMT
  • போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் பேட்டி
  • வீடுகளில் திருட்டு ஏற்பட்டால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டுகோள்

குனியமுத்தூர்,

கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் கூறியதாவது:-

வீட்டின் வாசலில் இரும்பு கதவு அமைத்து வெளியே செல்லும்போது பூட்டிவிட்டு செல்கிறோம். அப்போது வீட்டு வாசலில் தொங்கும் பூட்டு திருடர்களின் கண்களை உருத்துகிறது. எனவே அவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதை எளிதாக அறிந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுகின்றனர். எனவே உள்தாழ்ப்பாள் மூலம் கதவை பூட்டிவிட்டு செல்லும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வீட்டில் ஆள் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலான திருட்டுகள் தவிர்க்கப்படும்.

எனவே புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட முறையை பயன்படுத்தினால் நல்லது. ஏற்கனவே பூட்டு தொங்கும் முறையை பயன்படுத்துபவர்கள் கூட, இந்த நிலைக்கு மாறினால் தங்களின் உடைமைகளை பாதுகாக்க இயலும். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு கூச்சலிட்டு அழுது பயனில்லை. அதற்கு முன்பாகவே வருமுன் காப்போம் அடிப்படையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசலில் சி.சி.டி.வி கேமரா அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திருட்டு சம்பவங்களை பெரியளவில் தவிர்த்து விடலாம்.எத்தனையோ இடங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகிறது. அங்கு சி.சி.டி.வி கேமரா பொருத்தினால் அத்தகைய திருட்டு சம்பவங்களை தவிர்த்து விடலாம். அப்படியே திருட்டு ஏற்பட்டால் கூட குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடலாம்.

குடியிருப்பு பகுதிக்குள் சம்பந்தமில்லாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் ஏதாவது பிரச்சினை அல்லது திருட்டு ஏற்பட்டால், உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பிறருக்கு ஏற்படும் துன்பம் நமக்கு என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படியாக ஒவ்வொருவரும் செயல்பட்டால் திருட்டு மட்டுமின்றி குற்ற சம்பவங்களையும் எளிதில் தடுத்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

Similar News