உள்ளூர் செய்திகள்

கோவையில் 3 நாட்களாக பிணவறையில் இருக்கும் சுவிட்சர்லாந்து பெண் உடல்

Published On 2023-03-08 09:48 GMT   |   Update On 2023-03-08 10:11 GMT
  • கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
  • சுவிட்சர்லாந்து நாட்டு வெளியுறவு துறை இன்னும் இந்திய வெளியுறவு துறைக்கு அனுமதி கடிதம் அளிக்கவில்லை.

கோவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள திருமலையாம் பாளையத்தில் கிராம ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மூளை சுருக்கம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அசி கோமர்ஸ் (வயது 65) என்ற பெண் தனது கணவர் மைக்கேல் கோமரசுடன் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அசிகோமர்சை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. மாரடைப்பால் இறந்த அசி கோமர்சின் உடலை இங்கேயே தகனம் செய்ய அவரது கணவர் மைக்கேல் கோமர்ஸ் முடிவு செய்தார்.

இறந்து போனவர் சுவிட்சர்லாந்து நாட்டு பெண் என்பதால் இந்திய வெளியுறவு துறையினர் அந்த நாட்டிடம் அனுமதி பெற்று தரவேண்டும். அப்போதுதான் இங்கு அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியும்.

ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டு வெளியுறவு துறை இன்னும் இந்திய வெளியுறவு துறைக்கு அனுமதி கடிதம் அளிக்கவில்லை. அதனால் அவரை பிரேத பரிசோதனை செய்ய தாமதமாகி வருகிறது.

இன்றோ அல்லது நாளையோ அனுமதி கிடைத்து விடும் என்று கூறுப்படுகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு பெண்ணின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் கடந்த 3 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News